< Back
தேசிய செய்திகள்
மங்களூருவில் ரூ.3,800 கோடியில் 8 திட்டங்கள் தொடக்கம்:  இரட்டை என்ஜின் அரசால் தான் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்-பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

மங்களூருவில் ரூ.3,800 கோடியில் 8 திட்டங்கள் தொடக்கம்: இரட்டை என்ஜின் அரசால் தான் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்-பிரதமர் மோடி

தினத்தந்தி
|
3 Sept 2022 3:48 AM IST

மங்களூருவில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இரட்டை என்ஜின் அரசால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் என்று கூறினார்.

பெங்களூரு: மங்களூருவில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டிலான 8 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இரட்டை என்ஜின் அரசால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் என்று கூறினார்.

ரூ.3,800 கோடி திட்டங்கள்

மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை சார்பில் கர்நாடக மாநிலம் மங்களூரு புதிய துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.3,800 கோடி மதிப்பீட்டில் 8 திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதனை கோல்ட் பின்ச் மைதானத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுதொடங்கி வைத்தார்.

பிரதமர் தொடங்கிவைத்த திட்டங்களின் விவரம் வருமாறு:-

1. புதிய மங்களூரு துறைமுகத்தில் கன்டெய்னர்கள் மற்றும் பிற சரக்கு கையாளும் 14-வது பர்த் பிரிவு எந்திர மயமாக்கப்படுகிறது. ரூ.281 கோடியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் புதிதாக 2,200 பேருக்கு வேலை கிடைக்கும். சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பதுடன் பணி நிர்வாகத்திற்கு ஆகும் நேரம் 35 சதவீதம் மிச்சப்படுத்தப்படும். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

2. பி.எஸ்.கே. தர எரிபொருள் உற்பத்தி, தரம் உயர்வு திட்டம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்படுத்தப்படும். இதன் திட்ட மதிப்பு ரூ.1,829 கோடி.

3. கடல்நீர் உப்பு நீக்கும் திட்டம், சுத்தமான நீரை பாதுகாப்பது, தினமும் 3 கோடி லிட்டர் நீரை கையாளும் திறன் கொண்ட திட்டம். இதன் மதிப்பு ரூ.677 கோடி. மேற்கண்ட 3 திட்டங்களின் பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

4. புதிய மங்களூரு துறைமுகத்தில் முழுமையான திரவ எரிபொருள் கியாஸ் மற்றும் பெட்ரோல், ஆயில் மற்றும் லூப்ரிகென்ட் ஆயில் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.500 கோடி. 2,200 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் அவற்றை கையாளும் திறன் ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்கப்படும்.

5. புதிய மங்களூரு துறைமுகத்தில் எரிபொருள் டேங்கர்கள் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. திட்ட மதிப்பு ரூ.100 கோடி. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவு குறையும். கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் கப்பல்களை நிர்வகிக்கும் பணி எளிமைப்படுத்தப்படும்.

6. புதிய மங்களூரு துறைமுகத்தில் "பிடுமென்" கூரை அமைக்க பயன்படுத்தப்படும் பொருளாலான சேமிப்பு டேங்கர் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இது ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

7. புதிய மங்களூரு துறைமுகத்தில் "பிடுமென்" கச்சா எண்ணெய் சேமிப்பு டேங்கர்கள் மற்றும் அது தொடர்பான வசதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் "பிடுமென்" இறக்குமதிக்கு ஆகும் செலவு குறையும். இதன் திட்ட மதிப்பு ரூ.100 கோடி.

8. குலையில் இ.பி.சி. மாதிரியில் மீன்வள துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. ரூ.196 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8,500 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் கடலோர மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைக்கும். மேற்கண்ட 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பிரதமர் பேச்சு

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு: திட்டங்களை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. இதில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. சாகர்மாலா திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு, ரெயில் பாதைகள் மின்மயம் போன்ற துறைகளில் 4 மடங்கு சாதனை புரிந்துள்ளோம்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் இதுவரை 30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதுகாப்பு

அதே போல் பிரதமரின் ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 30 லட்சம் பேருக்கு 4 ஆயிரம் கோடி அளவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பலை கொச்சியில் இன்று (நேற்று) தொடங்கி வைத்தேன். மத்திய அரசு, ராணுவ பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

புதிய மங்களூரு துறைமுகத்தில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்வதுடன் உள்ளூர் அளவில் வேலை வாய்ப்புகளும் உருவாகும். ஒரு மாவட்டம் ஒரு தொழில் திட்டத்தின் கீழ் உள்ளூர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வது சுலபமாகும். அதுவும் குறைந்த செலவில் ஏற்றுமதி சாத்தியமாகும். புதிய மங்களூரு துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 2 மடங்காக அதிகரிக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு (பா.ஜனதா) இருப்பதால் கர்நாடக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடிகிறது.

சாத்தியமில்லை

நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால் இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை. மேலும் அம்ரித் காலத்தில் நாட்டின் பெரிய இலக்குகளை நிறைவேற்றும் பாதையாகவும் உள்ளது. உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மேலும் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும். நமது உற்பத்தி பொருட்கள் விலையில் உலக அளவில் போட்டி போடும் வகையில் இருக்க வேண்டும். இது சரக்குகளை கையாளும் செலவுகள் குறைவாக இல்லை என்றால் சாத்தியமில்லை.

விரைவான இணைய சேவை

பாரத்மாலா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமகங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக துறைமுகம் சார்ந்த வளர்ச்சி தான் வளர்ச்சியின் முக்கிய மந்திரமாக உள்ளது. இந்த முயற்சிகள் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் திறன் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

அரசின் திட்டங்களால் அதிக எண்ணிக்கையிலான ஏழை மக்கள் வளர்ச்சியின் பாதையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள், சிறு தொழில் செய்வோர் பயன் அடைய ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விரைவான இணைய சேவை கிடைக்க வேண்டியது அவசியம்.

ஏற்றுமதி

நாட்டில் நீளமான கடற்கரையை பயன்படுத்தி கப்பல் சாா்ந்த சுற்றுலாவை பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு உலக அளவில் மந்தநிலை நீடித்தாலும் இந்தியா ரூ.50 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சில்லரை, டிஜிட்டல், காட்சி (விசுவல்) வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடி செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்ஜினுடன் இணைந்துள்ள ஒவ்வொரு துறையும் முழு திறனுடன் வளர்ச்சி அடைந்து வருகிறது. சேவைத்துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 70 ஆயிரம் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய கப்பல், துறைமுகத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மத்திய இணை மந்திரி ஷோபா, நளின்குமார் கட்டீல் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி மங்களூரு பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரதமர் வருகையையொட்டி மங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்