< Back
தேசிய செய்திகள்
துருக்கி நிலநடுக்கம்; 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்: இந்திய லெப்டினன்ட் கர்னல் பேட்டி
தேசிய செய்திகள்

துருக்கி நிலநடுக்கம்; 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்: இந்திய லெப்டினன்ட் கர்னல் பேட்டி

தினத்தந்தி
|
20 Feb 2023 2:17 PM IST

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி, மீட்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓரிரு மணி நேரத்தில் ராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டது.



புதுடெல்லி,


துருக்கியில் வரலாறு காணாத அளவில் கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா சார்பில் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

துருக்கியில் மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், ராணுவ குழுவினரும் சொந்த நாடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், ராணுவ மருத்துவமனையின் இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் சர்மா இன்று அளித்த பேட்டியின்போது, இந்த பேரிடரை எதிர்கொள்ள எங்களை அனுப்பி வைக்கும் உடனடி முடிவை எடுத்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எங்களது ராணுவ மருத்துவமனையை துருக்கியில் அமைத்து, உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கூறப்பட்டது. நாங்கள் சென்ற ஒரு சில மணிநேரத்தில் தயாரானோம். சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தொடங்கினோம்.

ஒட்டு மொத்த மருத்துவ பணியில் நாங்கள் 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். சிறிய மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன. சரியான தருணத்தில் மருத்துவ சிகிச்சைளை மக்களுக்கு அளித்து, அவர்களது மனங்களில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்பட்டது.

அந்த சாதனையை நாங்கள் படைத்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார். துருக்கியில் உள்ள நோயாளிகள் நன்றியுடையவர்களாக இருந்தனர்.

ஏனெனில், அந்நாட்டில் சுகாதார நல அமைப்பு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. அதனால், நமது நாட்டுக்கும், குழுவினருக்கும் அதிக நன்றியுடையவர்களாக துருக்கி மக்கள் காணப்பட்டனர். அந்த வகையில், நாங்கள் அந்நாட்டில் இருந்து தேவையான மருத்துவ உதவிகளை அவர்களுக்கு வழங்கினோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்