நடிகை துனிஷா தற்கொலை எதிரொலி; மத மாற்ற சம்பவங்களை தடுக்க மராட்டியத்தில் கடுமையான சட்டம் - மந்திரி கிரிஷ் மகாஜன்
|மத மாற்ற சம்பவங்களை தடுக்க மராட்டிய அரசு கடுமையான சட்டத்தை கொண்டுவர உள்ளதாக மந்திரி கிரிஷ் மகாஜன் கூறினார்.
இந்து பெண்களை திருமணம் செய்து அதன்மூலம் மதமாற்றம் செய்யும் சதி அரங்கேறி வருவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டு வருகின்றன. இதனை அவர்கள் 'லவ் ஜிகாத்' என்று அழைக்கிறார்கள்.
ஷரத்தா கொலை
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இதுபோன்ற மதமாற்றத்தை அவர்கள் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்த பெண் ஷரத்தா கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது காதலன் அப்தாப் அமீன், ஷரத்தாவை டெல்லியில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன். அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து, பின்னர் காட்டுப்பகுதியில் வீசினார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலைக்கு பின்னால் மத மாற்ற முயற்சி நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை தற்கொலை
பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 21) தற்கொலையும் இதேபோன்ற சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை துனிஷா சர்மா வசாய் பகுதியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் கடந்த சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் நடித்து வந்த ஷீசன் கான் (26) என்ற வாலிபரை காதலித்ததும், அவர்களின் காதல் முறிவே இந்த தற்கொலைக்கு காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஷீசன் கானை கைது செய்தனர். நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு பின்னாலும் மதமாற்ற முயற்சி இருப்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மந்திரி பரபரப்பு பேட்டி
இந்த நிலையில் இதுபோன்ற மதமாற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக மராட்டிய கிராம வளர்ச்சி மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான கிரிஷ் மகாஜன் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது:-
கடுமையான சட்டம்
தொலைக்காட்சி தொடர் நடிகை துனிஷா ஷர்மாவின் மரணம் லவ் ஜிகாத் சம்பந்தப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மற்ற மாநிலங்களில் நடைமுறை படுத்தப்பட்டு உள்ள 'லவ் ஜிகாத்' சட்டங்களை ஆய்வு செய்து மராட்டியத்தில் அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே இந்த வழக்கை பா.ஜனதா தேவையின்றி மதமாற்ற கோணத்தில் அணுகுவதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற வழக்குகளை பா.ஜனதா லவ் ஜிகாத் கோணத்தில் அணுகுகிறது. போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.