மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு
|வெங்கடேஸ்வரசாமி கோவில் பூமி பூஜைக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
மும்பை,
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரில் அழைப்பு
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மும்பையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் புதிதாகக் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை வருகிற 21-ந்தேதி நடக்கிறது. பூமி பூஜை நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பங்கேற்குமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.
அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் வேத பண்டிதர்கள் முதல்-மந்திரி ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். இருவருக்கும் லட்டு பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
அரசு காணிக்கை
அப்போது தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், மும்பையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டப்பட உள்ளது. பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மராட்டிய முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுத்தோம். இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறினார்கள்.
கோவில் கட்டுவதற்காக மராட்டிய அரசு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு 10 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக வழங்கி உள்ளது. அந்த இடத்தில் கோவில் கட்ட ரேமண்ட் நிறுவன தலைவர் கவுதம் சிங்கானியா முன்வந்துள்ளார். பூமி பூஜை நிகழ்ச்சி முடிந்ததும், கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும், என்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.