< Back
தேசிய செய்திகள்
போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி; கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
தேசிய செய்திகள்

போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி; கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

பெங்களூரு அருகே நெலமங்களாவில் போலீஸ்காரரை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

நெலமங்களா:

கொள்ளையன் கைது

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த யோகானந்தா என்ற 'நைட்ஷிப்ட்' யோகாவை கைது செய்திருந்தார்கள். அவர் மீது நெலமங்களாவில் கொள்ளை, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதுதவிர துமகூரு, பெங்களூருவிலும் யோகானந்தா மீது வழக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 15 வழக்குகள் அவர் மீது இருந்தது.

இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து பெங்களூரு ஹெப்பாலில் ஒரு கடையில் அடகு வைத்திருந்த 50 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டு இருந்தார்கள். பின்னர் கொள்ளை, தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பகுதிக்கு நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் சசிதர் மற்றும் போலீசார், யோகானந்தாவை அழைத்து சென்றார்கள்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

அப்போது நெலமங்களா புறநகரில் வைத்து திடீரென்று சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து போலீஸ்காரர் அனுமந்த் ஹிப்பரகியை தாக்கிவிட்டு யோகானந்தா தப்பி ஓட முயன்றார். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அத்துடன் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் சசிதரையும் யோகானந்தா கல்லால் தாக்க முயன்றார். இதையடுத்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் யோகானந்தாவை நோக்கி 2 முறை சசிதர் சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக போலீஸ்காரர் அனுமந்த் ஹிப்பரகி, கொள்ளையன் யோகானந்தாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான யோகானந்தா மீது நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட தகவலை பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

மேலும் செய்திகள்