உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது; ரோகன் போபண்ணாவுக்கு அமித்ஷா வாழ்த்து
|உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், சனிக்கிழமை நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் அவருடன் இணைந்து விளையாடிய மேத்யூ எப்டென் இணை அதிரடியாக விளையாடியது.
இந்த இணை 7-6 (7/0), 7-5 என்ற செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய இத்தாலியை சேர்ந்த சிமோன் போலெல்லி மற்றும் ஆண்ட்ரி வாவஸ்சோரி இணையை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
ஆடவர் இரட்டையர் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வென்றவர் (43 வயது) என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார். இதற்கு முன் 60 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி, போராடி இறுதியாக, இந்த போட்டியில் வெற்றியை அடைந்துள்ளார்.
அவரது வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது. ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்ற ரோகன் போபண்ணாவுக்கு வாழ்த்துகள்.
உங்களுடைய தளராத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நீங்கள் ஒரு சர்வதேச சின்னம் ஆக உருவாகி இருக்கிறீர்கள். முரண்பாடுகளை தகர்த்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்துள்ளீர்கள். உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.