விமான பழுது நீக்கம்; ட்ரூடோ இன்று கனடா திரும்புகிறார்
|விமானத்தின் பழுது சரிசெய்யப்பட்டு கனடா பிரதமர் ட்ரூடோ இன்று நாடு திரும்புகிறார்.
புதுடெல்லி,
டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். எனினும், கனடாவுக்கு திரும்ப இருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பயணம், விமான கோளாறால் தடைப்பட்டது.
இந்நிலையில், அவருடைய விமானத்தின் பழுது நீக்கப்பட்டு, இன்று சரி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி கனடா நாட்டு பிரதமர் அலுவலகத்தின் ஊடக செயலாளர் முகமது உசைன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது.
விமானம் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இன்று மதியம் கனடா குழுவினர் புறப்பட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, கனடாவில் இருந்து ராயல் கனடா விமான படை, சி.சி.-150 போலாரிஸ் விமானம் ஒன்றை கடந்த ஞாயிற்று கிழமை இரவு இந்தியாவுக்கு அனுப்பி, பிரதமர் ட்ரூடோ மற்றும் அவருடைய குழுவினரை திரும்பி கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
எனினும், அந்த விமானத்தில் பரிசோதனை செய்தபோது பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. 36 ஆண்டு கால அனுபவம் நிறைந்த இந்த விமானம் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில், இந்த விமானம் ஒட்டாவா நகருக்கு திரும்ப இருந்தது. விமானம் ட்ரூடோவை சுமந்து கொண்டு திரும்பிய 30 நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டது.
இதேபோன்று, கடந்த 2019-ம் ஆண்டு இந்த விமானம், சுவர் ஒன்றின் மீது உரசியது. இதனால், அந்த விமானத்தின் மூக்கு பகுதி மற்றும் வலதுபுற இயந்திரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.