ரூ.15 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.! காவலுக்கு நின்ற போலீசார்.!
|ரூ.15 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தக்காளியை பாதுகாக்க போலீசார் காவலில் நின்றனர்.
ஐதராபாத்,
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து மராட்டிய மாநிலம் சந்திராபூருக்கு 18 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரி தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவலா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டன் கணக்கிலான தக்காளிகள் சாலையில் விழுந்தன. இதனை எடுக்க உள்ளூர் வாசிகள் திரளானோர் அங்கு திரண்டனர். உடனடியாக டிரைவர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் இருந்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை பாதுகாக்க காவலில் நின்றனர்.
முன்னதாக கடந்த 16ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 18 டன் தக்காளிகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளான போது அதற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.