லாரி-மினிவேன் மோதி விபத்து: சாலையில் சிதறிய ரூ.7 கோடி - போலீசார் விசாரணை
|விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கோதாவரி,
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரி மீது மினி வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மினிவேனில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின. இதைக் கண்டு சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மினி வேனை சோதனையிட்டபோது அதில், 7 மூட்டைகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் தேர்தல் தணிக்கை குழுவுக்கு தெரிவித்தனர். இந்த நிலையில் உரிய ஆவணங்களின்றி அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. மினி வேனில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மூட்டைகளில் ரூ.7 கோடி பணம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முதல் கட்ட விசாரணையில் அந்த பணம் ஐதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் நாளை மறுநாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.