மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு
|தரிகெரே அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு-
தரிகெரே அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
நேர்காணல்
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பிலேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது நண்பர் விஷ்வாஸ் (வயது 24). இவர்கள் ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இதையடுத்து அவர்கள் வேறு ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் சேருவதற்கு முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான நேர்காணல் நேற்று முன்தினம் தரிகெரேவில் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கார்த்திக் தனது தோழியான சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையை சேர்ந்த தீபிகா (22) என்பவரையும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள அழைத்திருந்தார்.
இதையடுத்து தீபிகா மற்றும் அவரது தோழி ஆகியோர் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவிற்கு பஸ்சில் வந்தனர். அவர்களை அழைத்து வருவதற்காக கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விஷ்வாஸ் சென்றிருந்தனர். அப்போது கார்த்திக், தீபிகாவின் தோழியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டார். விஷ்வாஸ், தீபிகாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டார்.
2 பேர் சாவு
இதையடுத்து கார்த்திக், விஷ்வாஸ், மோட்டார் சைக்கிளில் பிலேனஹள்ளி பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். தரிகெரே போலீஸ் சரகத்திற்குட்பட்ட கட்டேஒரே என்ற கிராமத்தின் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று விஷ்வாசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்வாஸ் மற்றும் தீபிகா 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனே இது குறித்து தரிகெரே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரிகெரே போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தரிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.