< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் அமளி:  உரிமை மீறல் விசாரணைக்கு ஆளான 12 எம்.பி.க்கள்; விவரம் வெளியீடு
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் அமளி: உரிமை மீறல் விசாரணைக்கு ஆளான 12 எம்.பி.க்கள்; விவரம் வெளியீடு

தினத்தந்தி
|
21 Feb 2023 10:59 AM IST

வீடியோ எடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்டான நிலையில், 12 எம்.பி.க்களுக்கு எதிரான உரிமை மீறல் விசாரணைக்கு துணை ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் அதானி நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அதன்பின் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் பணமோசடி பற்றி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, இரு அவைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோது, தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையத்திற்கு வந்து கூச்சலும், குழப்பமும் விளைவித்தனர்.

அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்றும் வலியுறுத்தின.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 13-ந்தேதி மேலவை கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், மேலவை அன்றைய தினம் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி காலை 11.50 மணியளவில் முதலில் அவை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க தங்கார் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

முதன்முறையாக அவை ஒத்தி வைக்கப்படுவதற்கு முன்பு, அவையின் தலைவர் ஜகதீப் தங்கார், பல்வேறு எம்.பி.க்களின் பெயரை குறிப்பிட்டார்.

இதன்படி எம்.பி.க்கள் ராகவ் சத்தா, இம்ரான் பிரதாப்கார்ஹி, சக்தி சின்ஹ் கோஹில், குமார் கேத்கர் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரது பெயரை அவர் குறிப்பிட்டு, இதுபோன்ற அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்து பேசினார்.

2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும்.

இதுபற்றி அவையில் தங்கார் கூறும்போது, திட்டமிட்டே உள்நோக்குடன் அவையை முடக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன. அவையை நடத்துவதற்கான வழி இதுவல்ல.

ஏற்கனவே நாம் நிறைய நேரம் வீணடித்து விட்டோம். இதுபோன்ற இடையூறுகள் அவையில் ஏற்பட்டால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாவேன் என அப்போது எச்சரிக்கை விடும் வகையில் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவை பற்றி தங்கார் குறிப்பிடும்போது, அவையில் உங்களுக்கான உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். ஒவ்வொரு முறையும் நெருக்கடிக்கு உட்பட்டு அவை தலைவர் செயல்படுகிறார் என கூறி வருகின்றீர் என கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ரஜினி பட்டேல் அவையில் ஏற்பட்ட அமளியை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அவரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து அவை தலைவர் உத்தரவிட்டார். இதனை அடுத்து, எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களுக்கு எதிராக உரிமை மீறல் விசாரணை செய்வதற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கார் ஒப்புதல் அளித்து உள்ளார்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த அவர்கள், சஞ்சய் சிங், சக்திசின்ஹ கோஹில், சுஷில் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், நரன்பாய் ஜே ரத்வா, சையது நசீர் உசைன், குமார் கேத்கர், இம்ரான் பிரதாப்கார்ஹி, எல். அனுமந்தையா, பூலோ தேவி நேத்தம், ஜெபி மேதர் ஹிஷாம் மற்றும் ரன்ஜீத் ரஞ்சன் ஆவர்.

இதுதவிர, ஆம் ஆத்மி கட்சியின் மேலவை எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரம் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அதானி பங்கு விவகாரம் பற்றி விவாதிக்க கோரியும் நோட்டீஸ் வழங்கினார்.

ஒரே நோட்டீசை அவர் திரும்ப, திரும்ப வழங்கிய நிலையில், அவருக்கு எதிராக அவையின் முதல் பாதி கூட்டத்தில், அவை தலைவர் தங்கார் கண்டனம் தெரிவித்து பேசினார். அவருக்கு எதிராக மற்றொரு உரிமை மீறல் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்