திரிபுரா: கனமழை, வெள்ளத்திற்கு 31 பேர் பலி
|திரிபுராவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு ஆளான 72 ஆயிரம் பேர் தங்களுடைய இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த வாரம் 19-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எனினும், 24-ந்தேதி முதல் மழை சற்று குறைந்தது. ஆனால், வெள்ளம் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மக்களின் வாழ்க்கையை பாதித்தது.
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 31 பேர் பலியாகி விட்டனர். இதனை திரிபுரா நிவாரண, புனரமைப்பு மற்றும் பேரிடர் மேலாண் துறை தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா, வெள்ள நிலைமையை பற்றி சீராய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
திரிபுராவில், 492 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ள பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், வெள்ள பாதிப்பினால், 72 ஆயிரம் பேர் தங்களுடைய இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.