< Back
தேசிய செய்திகள்
திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கட்சி  திடீர் கூட்டணி
தேசிய செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கட்சி திடீர் கூட்டணி

தினத்தந்தி
|
15 Jan 2023 1:35 AM IST

திரிபுரா சட்டசபை தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

திரிபுரா சட்டசபை தேர்தல்

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வந்துள்ளது. இவ்விரு கட்சிகளும்தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், கால்நூற்றாண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவு கட்டி, ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில் அங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.

எதிர்பாராத திருப்பம்

இந்தத் தேர்தலில் எதிர்பாராத ஒரு அதிரடி அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பரம எதிரிகளாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கைகோர்த்து, கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலைச் சந்திக்க உள்ளன. சட்டசபை தேர்தலையொட்டி நேற்று முன்தினம் மாலை அகர்தலாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நாராயண் கர்ரும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில்தான் திரிபுரா சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டாக சேர்ந்து சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.

இடப் பங்கீடு

இதை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் குமார் நிருபர்களிடம் வெளியிட்டு கூறியதாவது:-

திரிபுரா சட்டசபை தேர்தலில் நாங்கள் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான உத்தியை உருவாக்கவும், இடப்பங்கீட்டை இறுதி செய்யவும் மாநில காங்கிரஸ் கமிட்டியின் குழுவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரும் அமர்ந்து பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கூறும்போது, " மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், மாநிலத்தில் அரசியலைப்பு ஒழுங்கினை கடந்த 5 ஆண்டுகளாக சீரழித்து வரும் பா.ஜ.க.வை தோற்கடிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் திறந்த மனதுடன் ஆலோசனையை தொடங்கி உள்ளோம். யார், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது முக்கியம் அல்ல. பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதே முக்கிய செயல்திட்டம் ஆகும்" என தெரிவித்தார்.

அதே நேரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி தங்களுக்கு நல்ல பலனைத்தரும் என்று பா.ஜ.க. நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்