சிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு - திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
|சிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அகர்தலா,
திரிபுரா மாநிலத்தின் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள தர்மாநகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த சூழலில் சிறுமி கடத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு அவளது வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். அவள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது பிரேதபரிசோதனை மூலம் தெரியவந்தது.
அதை தொடர்ந்து, கடத்தல் வழக்கை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 2 பேர் சிறுமியை கடத்தி, கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு எதிரான வழக்கை தலைநகர் அகர்தலாவில் உள்ள சிறப்பு போக்சோ கோர்ட்டு விசாரித்து வந்தது. சுமார் 4 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 30-ந்தேதி இருவரையும் குற்றவாளிகளாக கோர்ட்டு அறிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சிறப்பு போக்சோ கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.