காங்கிரஸ் அலுவலகம் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்
|திரிபுரா இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகம் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தியதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
திரிபுராவில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தலைநகர் அகர்தலாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே, அகர்தலாவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. கற்களும் வீசப்பட்டன. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா உள்பட 19 பேர் காயமடைந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பா.ஜனதா குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.