< Back
தேசிய செய்திகள்
ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? : திரிபுரா சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

அகர்தலாவில் ஓட்டுப்பதிவுக்கான சாதனங்களை பெண் தேர்தல் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டுச்சென்றபோது எடுத்த படம்.

தேசிய செய்திகள்

ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? : திரிபுரா சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
16 Feb 2023 5:59 AM IST

திரிபுரா சட்டசபை தேர்தலில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அகர்தலா,

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது.

60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு மக்கள் விடைகொடுத்து, பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினர். தற்போது மாணிக் சகா அதன் முதல்-மந்திரியாக உள்ளார்.

பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கடும் போட்டி

இங்கு ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. போராடுகிறது. அதே நேரத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியே தீருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு, தனது அரசியல் எதிரியாக இருந்த காங்கிரசுடன் கை கோர்த்து, தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறது. 60 இடங்களில் 43 இடங்களை தன் கைவசம் வைத்துக்கொண்டு, 13-ஐ காங்கிரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒதுக்கித்தந்துள்ளது. மீதி 4 இடங்களை இந்திய கம்யூனிஸ்டு, புரட்சிகர சோசலிஸ்டு, பார்வர்டு பிளாக், சுயேச்சை என தலா ஒன்றாக பகிர்ந்து கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் பா.ஜ.க., மாநிலக்கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சியுடன் (5 இடங்கள்) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

மற்றொரு மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது. திரிணாமுல் காங்கிரசும் 28 இடங்களில் போட்டி போடுகிறது.

பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அணிகள் இடையேதான் 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும்போட்டி நிலவுகிறது.

259 வேட்பாளர்கள்

இங்கு 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள்தான் அதிகம்.

இவர்கள் 20 பெண் வேட்பாளர்கள் உள்பட 259 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள். அதிகபட்சமாக பா.ஜ.க. 12 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

திரிபுரா மக்கள் வாக்கு அளிக்க 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,100 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளளன. 28 மிகவும் பதற்றமானவை.

பலத்த பாதுகாப்பு

இங்கு தேர்தலுக்காக 25 ஆயிரம் மத்திய படையினருடன், 31 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் முக்கிய வேட்பாளர்கள் மாணிக் சகா (பார்டோவாலி), மத்திய ராஜாங்க மந்திரி பிரதிமா பவுமிக் (தன்பூர்) ஆவார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் ஜிதேந்திர சவுத்ரியும் (சப்ரூம்) முக்கிய வேட்பாளர்களில் அடங்குவார்.

திப்ரா மோதாவின் தலைவர் பிரத்யோத் தெப்பர்மா, தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் இந்தக் கட்சி பா.ஜ.க.வுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

ஆட்சியை பிடிப்பது யார்?

இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் சேர்த்துத்தான் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

திரிபுராவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது அன்று மாலை தெரிந்து விடும்.

மேலும் செய்திகள்