திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல்; முதல்-மந்திரி மாணிக் சஹா வெற்றி
|திரிபுரா சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி மாணிக் சஹா வெற்றி பெற்றுள்ளார்.
அகர்தலா,
திரிபுரா சட்டசபைக்கான 4 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இதில், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இதன்படி, பா.ஜ.க. வேட்பாளர்களான முறையே மாணிக் ஷா டவுன் பர்தோவாலி தொகுதியிலும், மலினா தேப்நாத் ஜுபராஜ்நகர் தொகுதியிலும் மற்றும் ஸ்வப்னா தாஸ் (பால்) சுர்மா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
திரிபுராவின் தலைநகராக உள்ள அகர்தலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுதீப் ராய் பர்மன் முன்னிலை பெற்றுள்ளார். இதனை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில், திரிபுரா சட்டசபை இடைத்தேர்தலில் பர்தோவாலி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி மாணிக் சஹா வெற்றி பெற்றுள்ளார்.
6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சஹா 12,556 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஆசிஷ் குமார் சஹா 8,193 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனால், 4,363 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் சஹா முன்னிலை பெற்றார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் மாணிக் சஹா 6,104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.