திரிபுரா: பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; 30 பேர் காயம்
|திரிபுராவில் பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 30 பேர் காயமடைந்தனர்.
அகர்தலா,
பா.ஜனதா ஆளும் திரிபுராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் யாத்திரை போன்ற பாதயாத்திரைகள் நடந்து வருகின்றன.
இதில் தெற்கு திரிபுராவில் 2 இடங்களில் இந்த யாத்திரைகள் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 20 தொண்டர்கள் காயமடைந்தனர்.
இதில் காங்கிரசார் நடத்திய பதில் தாக்குதலில் 10 பா.ஜனதா தொண்டர்களும் காயமடைந்தனர்.
இதற்கிடையே கோமதி மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தை பா.ஜனதா தொண்டர்கள் சூறையாடியதாக அந்த கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் 5 கம்யூனிஸ்டு தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளன.
இந்த வன்முறைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று தலைநகரில் பேரணி நடத்தினர். கவர்னர் மாளிகை நோக்கி நடந்த பேரணியை போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர்.
மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.