மேற்கு வங்காள கவர்னர் பதவி விலக வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
|பாலியல் புகாரில் சிக்கியுள்ள கவர்னர் ஆனந்த போஸ் பதவி விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னதாக ஆனந்த போஸ் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பெண் நடனக் கலைஞர் ஒருவர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை போலீசார் கடந்த வாரம் மாநில அரசிடம் ஒப்படைத்தனர்.
எனினும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனக்கூறி கவர்னர் ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இதுதொடர்பாக ராஜ்பவனில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை சுமார் 100 பொதுமக்களிடம் சி.வி.ஆனந்த போஸ் கடந்த 9ம் தேதி காட்டினார்.
இதனிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆனந்த போஸ் பதவி விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவன் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேற்குவங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அவர்கள் ஆனந்த போஸ் பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.