மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
|திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைமூர் கராமி என்ற நபரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் உள்பட ஏராளமானோர் பலியாகினர்.
இந்த நிலையில் சமீபத்திய தேர்தலில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் கிழக்கு கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைமூர் கராமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மைமூர் கராமியுடன் இருந்த நண்பர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் அந்த மர்ம நபர்கள் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மைமூர் கராமி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.