மங்களூருவில் திமிங்கல உமிழ் நீர் விற்க முயன்ற3 பேர் கைது
|மங்களூருவில் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூர் கடற்கரையில் சிலர் திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் பனம்பூர் கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் திமிங்கல உமிழ்நீர் இருந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் உடுப்பி சாலிகிராமத்தை சேர்ந்த ஜெயகரா (வயது 39), சிவமொக்கா மாவட்டம் சாகரை சேர்ந்த ஆதித்யா (25), ஹாவேரி மாவட்டம் சிக்காவியை சேர்ந்த லோகித்குமார் (39) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய காத்து நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான 900 கிராம் திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.