டெலிகிராம் செயலி மூலம் ஆசிரியையை மிரட்டி ரூ.3 லட்சம் பறிக்க முயற்சி; வாலிபர் கைது
|டெலிகிராம் செயலி மூலம் ஆசிரியையை மிரட்டி ரூ.3 லட்சம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சுல்கேரி அருகே பேரோதிட்டயகட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் பெல்தங்கடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், டெலிகிராம் செயலி மூலம் ஜோதிக்கு சுல்கேரி அருகே அட்ரிஞ்சா பகுதியை சேர்ந்த அஸ்வத் (வயது 23) என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அஸ்வத், ஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
அதாவது, தனக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உனது கணவரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன ஜோதி, இதுபற்றி வேனூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அஸ்வத்தை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ஜோதிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி ஜோதியும், அஸ்வத்தை தொடர்புகொண்டு ரூ.1 லட்சம் தருவதாக கூறினார்.
பின்னர் ஜோதியிடம் தான் சொல்லும் இடத்துக்கு வந்து பணத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜோதி, அஸ்வத் கூறிய இடத்துக்கு சென்று பணத்தை வைத்துள்ளார். அப்போது அந்த பணத்தை எடுக்க அஸ்வத் வந்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.
ஆனாலும் போலீசாரின் பிடியில் இருந்து அஸ்வத் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவரது செல்போன் சிக்னலை வைத்து குண்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அஸ்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அஸ்வத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.