மணிப்பூர் வன்முறையின்போது பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் போலீசில் வாக்குமூலம்
|மணிப்பூரில் மானபங்கம் செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் வாக்கு மூலத்தை பெற்றனர்.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையிராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. 3 மாதங் களாக நீடித்து வரும் கலவரத்தில் 160-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோய் உள்ளன.
இந்த சூழலில் குகி பழங்குடியினத்தை 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மே மாதம் 4-ந் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளி உள்பட 7 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பெண் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் நேற்று பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்கு மூலத்தை பெற்றனர்.
அந்த 2 பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மாநில போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து வாக்கு மூலத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. 6 வழக்குகளை விசாரித்து வருவதாகவும், ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வலியுறுத்தி தலைநகர் இம்பாலில் நேற்று வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இம்பாலில் உள்ள முக்கிய சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில் மணிப்பூரின் மலை மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்று குகி-சோ மகளிர் மன்றம் அமைப்பை சேர்ந்த பெண்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.