சாலையில் பணத்தை வீசி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: 3 பேரை கைது செய்த போலீசார்..!
|வெடி வெடித்தும் சாலையில் பணத்தை வீசியும் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
தற்போது இளைஞர்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. அதிலும் ஒருசில இளைஞர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லைமீறி வருகின்றனர். தமிழகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது டெல்லி அருகே காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 28ந் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இளைஞர்கள் 3 பேர் கார் மீது ஏறி நின்று கூச்சலிடுகின்றனர். பின்னர் அதில் ஒரு இளைஞர் தன் கையில் வைத்திருக்கும் பட்டாசை பற்றவைத்து வானத்தை நோக்கி காட்டுகிறார். மற்றோரு இளைஞர் கையில் ரூபாய் நோட்டுகளை எடுத்து சாலையில் தூக்கி வீசுகிறார்.
அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த மற்றோரு இளைஞர் சாலையில் நிற்பவர்களை பார்த்து கூச்சலிடுகிறார். இதனை சாலையில் பொதுமக்கள் சிலர் நின்று பார்ப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. அதில் சிலர் தங்களது மொபைல் போன்களில் இவற்றை படம் பிடிக்கின்றனர்.
அந்த வீடியோவை ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் 'அதிகாரிகள் கவனத்திற்கு, சட்டம் ஒழுங்குக்கு கைவிரல் காட்டும் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காணொளி அக்டோபர் 28 அன்று எடுக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காசியாபாத் காவல் ஆணையாளர் அலுவலகம் தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 'தற்போது வைரலாக பரவும் வீடியோவில் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.