< Back
தேசிய செய்திகள்
மகனை கொன்ற கல்நெஞ்ச பெண்ணுடன் பயணம்... வாடகை கார் டிரைவர் கூறிய திக்..திக்.. அனுபவங்கள்
தேசிய செய்திகள்

மகனை கொன்ற கல்நெஞ்ச பெண்ணுடன் பயணம்... வாடகை கார் டிரைவர் கூறிய திக்..திக்.. அனுபவங்கள்

தினத்தந்தி
|
13 Jan 2024 7:53 AM IST

4 வயது பிஞ்சு மகனை சுசனா சேத் கொலை செய்த சம்பவத்தில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு,

பெங்களூரு, யஷ்வந்தபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுசனா சேத், தனது 4 வயது மகன் சின்மயை சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார்.

மகனை கொலை செய்த பின்னர் அவனது உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு கோவாவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தார். அப்போது சுசனா சேத்தை பிடிக்க போலீசாருக்கு கார் டிரைவர் உறுதுணையாக இருந்துள்ளார். அதாவது சுசனா சேத் தனது மகனின் உடல் அடங்கிய சூட்கேசை வாடகை காரில் கொண்டு வந்தபோது, அந்த காரின் டிரைவரிடம் கோவா போலீசார் கொங்கன் மொழியில் பேசி சுசனா சேத்தை பிடித்தனர்.

இந்த திக்...திக்... பயணம் குறித்து கார் டிரைவர் ரே ஜான் நேற்று சில தகவல்களை தெரிவித்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

"கேன்டோலிமில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுசனா சேத்தை கடந்த 8-ந் தேதி அதிகாலையில் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். என்னுடையது இன்னோவா கார் ஆகும். காரை அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்கள் முன்பதிவு செய்தனர். நான் அடுக்குமாடி குடியிருப்பை அடைந்ததும் சுசனா சேத் தனது சூட்கேஸ் வரவேற்பு அறையில் இருப்பதாகவும், அதை எடுத்து காரின் பின் பகுதியில் வைக்கும்படியும் கூறினார். அதன்படி நானும் வரவேற்பு அறைக்கு சென்று அவரது சூட்கேசை எடுத்து காரின் பின்பகுதியில் வைக்க முயன்றேன். அது மிகவும் கனமாக இருந்தது.

அப்போது அந்த சூட்கேசில் அவரது மகனின் உடல் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. சுசனா சேத் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டார். அப்போது நான் சூட்கேசில் இருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டால் எடை குறையும் என்றும், சூட்கேசை தூக்க வசதியாக இருக்கும் என்றும் கூறினேன். ஆனால் அதற்கு சுசனா சேத் மறுத்து விட்டார்.

அதனால் நான் அவரது சூட்கேசை தூக்க முடியாமல் கார் வரை சில அடி தூரம் இழுத்து வந்தேன். அவர் என்னுடன் காரில் வந்தபோது ஒரேயொரு முறை தான் பேசினார். வடக்கு கோவா பிகோலிம் பகுதியில் கார் வந்தபோது என்னிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி தருமாறு கேட்டார். அதன்படி நானும் வாங்கி கொடுத்தேன். அதன்பின் அவர் பேசவில்லை. நாங்கள் கர்நாடகா-கோவா சாலையில் சோர்லா காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அங்கு பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.

அங்குள்ள போலீசாரிடம் நான் கேட்டபோது இந்த போக்குவரத்து நெரிசல் சீராக 4 மணி நேரமாகும் என்று கூறினர். அப்போது நான் சுசனா சேத்திடம் 'மேடம் இந்த போக்குவரத்து நெரிசல் சீராக 6 மணி நேரம் ஆகும் என்று கூறுகிறார்கள். நான் வேண்டுமென்றால் விமான நிலையத்திற்கு காரை ஓட்டிச் செல்கிறேன். நீங்கள் அங்கிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்று விடுகிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் எவ்வளவு நேரமானாலும் காரிலேயே செல்வோம் என்று கூறினார்.

போலீசாரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

அதன்பின்னர் நான் தொடர்ந்து காரில் அவரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். இதற்கிடையே போலீசாரிடம் இருந்து எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னை உஷார்படுத்தினர். நீங்கள் அழைத்துச் செல்லும் பயணி மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறினர். பின்னர் கோவா மாநில கலங்குட்டே போலீசார் என்னை தொடர்பு கொண்டு கொங்கன் மொழியில் பேசி அருகில் ஏதேனும் போலீஸ் நிலையம் இருந்தால் அங்கு காரை ஓட்டிச் செல்லும்படியும், சுசனா சேத்தை போலீசாரிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினர்.

நான் கூகுள் மேப் மற்றும் ஜி.பி.எஸ். உதவியுடன் அருகில் போலீஸ் நிலையம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தேன். ஆனால் இல்லை. மேலும் போலீசார் யாரும் இருக்கிறார்களா? என்று சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் பார்த்தேன். யாரும் இல்லை.

500 மீட்டர் தொலைவில் போலீஸ் நிலையம்

அதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு நெடுஞ்சாலை ஓட்டல்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பார்த்தேன். பின்னர் ஒரு ஓட்டல் வந்தது. அங்கு சென்று நான் சாப்பிடுவது போல், அங்கிருந்தவர்களிடம் அருகில் போலீஸ் நிலையம் எங்கு இருக்கிறது என்று கேட்டேன். அப்போது அவர்கள் 500 மீட்டர் தொலைவில் போலீஸ் நிலையம் இருப்பதாக தெரிவித்தனர்.

அங்கிருந்து 1½ மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடைந்து விடலாம் என்றும் கூறினர். அதையடுத்து அவர்கள் கூறியபடி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அது சித்ரதுர்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஐமங்களா போலீஸ் நிலையம் ஆகும். நான் போலீஸ் நிலையம் சென்றடையும் வரை கலங்குட்டே போலீசார் என்னுடன் செல்போனிலும், ஆன்லைனிலும் தொடர்பில் இருந்தனர்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை

நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டரை சந்திக்க சுமார் 15 நிமிடங்கள் ஆனது. ஆனால் அதுவரையில் சுசனா சேத் காரில் அமைதியாக அமர்ந்து இருந்தார். போலீசார் வந்து அவரது சூட்கேசை திறந்து பார்த்து சிறுவனின் உடலை கண்டுபிடித்தபோது நான் அதிர்ந்து போனேன். முதலில் ஒரு பெரிய பொம்மை, அதன்கீழ் துணிகள், அதற்கு கீழ் சிறுவனின் உடல் இருந்தது. சிறுவனின் உடலை பார்த்ததும் போலீசார் சுசனா சேத்திடம் இது உங்களுடைய மகனா? என்று கேட்டனர். அதற்கு அவர் 'யெஸ்'(ஆமாம்) என்று பதற்றம் இல்லாமல் பதில் அளித்தார். சுசனா சேத் 10 மணி நேரம் என்னுடன் காரில் பயணித்து வந்தார். ஆனால் இந்த மொத்த பயணத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை."

இவ்வாறு சுசனா சேத் பயணித்த காரின் டிரைவர் ரே ஜான் கூறினார். 4 வயது பிஞ்சு மகனை சுசனா சேத் கொலை செய்த சம்பவத்தில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்