ஆங்கிலம் உள்பட 23 மொழிகளில் எந்த மொழியில் பேசினாலும் மொழிபெயர்ப்பு வசதி; புதிய நாடாளுமன்றத்தில் அறிமுகம்
|புதிய நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் உள்பட 23 மொழிகளில் எந்த மொழியில் பேசினாலும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மொழி பிரச்சினை
பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பான இந்திய நாட்டில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட மொழி இருக்கிறது. மொழியால் நாம் வேறுபட்டாலும் உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு செல்லும் உறுப்பினர்கள் அவையில் பேசும்போது தங்களது கருத்துக்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் புரிய வைக்க முடிவது இல்லை. காரணம், மொழி.
ஆங்கிலமும், இந்தியும் தெரிந்து இருந்தாலும் சில உறுப்பினர்கள் தங்களது மாநில மொழிகளில் பேசவே பிரியப்படுகிறார்கள். இப்படி பேசும்போது அதை பிற மாநில உறுப்பினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மொழி புரியாததால் அவர்கள் உணர்ச்சிமிகு வார்த்தைகளைக்கூட சாதாரணமாக நினைத்து விடுகிறார்கள். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல கருத்துக்கள் அவையில் முக்கியத்துவம் இல்லாததுபோல ஆகி விடுகிறது.
23 மொழிகள்
தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆங்கிலத்தில் பேசினால் இந்தியிலும், இந்தியில் பேசினால் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் வசதி உள்ளது. இருக்கைகள் முன் உள்ள 'ஹெட்போன்'களை மாட்டிக்கொண்டால் மொழி பெயர்ப்பை அறிந்து கொள்ளலாம். பிற மொழிகளில் பேசினால் அதை புரிந்து கொள்ள முடியாது.
இந்த குறையைப் போக்க அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 23 மொழிகளையும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் வசதி செய்யப்பட வேண்டும் என்ற யோசனையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்து வைத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல் வடிவம் பெற்றது.
இனி பிரச்சினை இருக்காது
இதன்படி கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வேலைகள் நடைபெற்றது. அனைத்து மொழிகளிலும் உள்ள வார்த்தைகளை அர்த்தம் மாறாமல் மொழிப்பெயர்ப்பு செய்து பதிவேற்றம் செய்யும் இந்த பணிகளை கவனிப்பதற்காக 43 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. அது சோதித்தும் பார்க்கப்பட்டு விட்டது. புதிய நாடாளுமன்றத்தில் இந்த வசதிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் இதுதொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மொழிப்பெயர்ப்பை செயல்படுத்த தொழில்நுட்ப பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
எனவே இனிமேல் புரிதலில் எந்த பிரச்சினையும் இருக்காது. அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் தமிழ், அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இந்த மொழிகளுடன் ஆங்கிலமும் மொழிப்பெயர்ப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது.