பாட்னா கோர்ட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
|டிரான்ஸ்பார்மரை முறையாக பராமரிக்காததே விபத்திற்கு காரணம் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சிவில் கோர்ட்டு வளாகத்தில் இன்று மதியம் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தேவேந்திர சிங் என்ற நபர் உயிரிழந்த நிலையில், 2 வழக்கறிஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தற்போது பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே டிரான்ஸ்பார்மரில் ஏற்கனவே சில பழுதுகள் இருந்ததாகவும், அதனை நிர்வாகத்தினர் சரியாக பராமரிக்கவில்லை எனவும் கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. அசோக் குமார் கூறுகையில், உயிரிழந்த நபரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க மறுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முயன்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் டிரான்ஸ்பார்மரை பராமரிக்காதது குறித்து வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.