< Back
தேசிய செய்திகள்
கே.ஆர்.புரம் தாசில்தார், ராய்ச்சூருக்கு இடமாற்றம்
தேசிய செய்திகள்

கே.ஆர்.புரம் தாசில்தார், ராய்ச்சூருக்கு இடமாற்றம்

தினத்தந்தி
|
5 July 2023 2:38 AM IST

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ள கே.ஆர்.புரம் தாசில்தாரை ராய்ச்சூருக்கு இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

சொகுசு கார்கள்

பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்தவர் அஜித்குமார் ராய். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே கடந்த 28-ந்தேதி லோக் அயுக்தா போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கே.ஆர்.புரம் தாசில்தார் வீடு மற்றும் அலுவலகமும் ஒன்றாகும். இந்த சோதனையில் அஜித்குமார் ராய், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை தனது உறவினர், நண்பர்கள் பெயரில் வாங்கி குவித்ததும், 11 சொகுசு கார்கள், விலை உயர்ந்த கைகெடிகாரங்கள், மதுபாட்டில்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் விசாரணையில் அவர் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே டெல்லியில் உள்ளது போன்ற கார் பந்தய மைதானத்தை அமைப்பதற்காக நிலம் வாங்கியதும் அம்பலமானது.

பணியிடை நீக்கம்

ஒட்டுமொத்தமாக அவர் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி முறைகேடாக குவித்தது தெரிந்தது. இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், அஜித்குமார் ராயை கைது செய்தனர். மேலும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே அஜித்குமார் ராயிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி அவருக்கு 7 நாட்கள் லோக் அயுக்தா காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது அவரை சொந்த ஊரான புத்தூருக்கு அழைத்து வந்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதான கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராயை, பணியிடை நீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ள அஜித்குமார் ராயை, ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாசில்தாராக பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்