< Back
தேசிய செய்திகள்
யாத்திரையின்போது மோதல்: ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சிஐடி பிரிவுக்கு மாற்றம்
தேசிய செய்திகள்

யாத்திரையின்போது மோதல்: ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சிஐடி பிரிவுக்கு மாற்றம்

தினத்தந்தி
|
25 Jan 2024 1:27 PM IST

மோதல் தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

கவுகாத்தி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை' தொடங்கினார். மார்ச் 20-ந் தேதி, மும்பையில் இந்த யாத்திரை முடிவடைகிறது. நேற்று முன்தினம் அசாம் மாநில தலைவர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது, யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸ் தொண்டர்கள் உடைத்து எறிந்தனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து கூட்டத்தை தூண்டி விட்டதாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், யாத்திரையின்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அசாம் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மாநில சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "கடந்த 23-ம் தேதி கவுகாத்தியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் நடைபெற்ற யாத்திரையில் நிகழ்ந்த பல்வேறு சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகள், சிறப்பு விசாரணை குழு மூலம் ஆழமான விசாரணைக்காக அசாம் சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்