ஓடும் ரெயிலில் திடீரென படுக்கை அறுந்து விழுந்து விபத்து: பயணி பலியான பரிதாபம்
|ஓடும் ரெயிலில் படுக்கை அறுந்து விழுந்ததில் பயணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அலிகான் (வயது 62). பொன்னானி பகுதியில் எல்.ஐ.சி. முகவராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர் முகமது என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் செல்வதற்காக எர்ணாகுளம்-டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். 2 பேரும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பெட்டியில் பயணம் செய்தனர்.
அந்த பெட்டியின் கீழ் பெர்த்தில்(படுக்கை) அலிகான் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நடுவே உள்ள மிடில் பெர்த்தில் மற்றொருவர் படுத்து இருந்தார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் ரெயில் சென்றது.
அப்போது மிடில் பெர்த் திடீரென அறுந்து,அலிகான் மீது விழுந்தது. இதில் அவரது கழுத்து எலும்புகள் உடைந்ததோடு, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் அறுந்து விழுந்த மிடில் பெர்த்தில் படுத்திருந்தவரும் கீழே விழுந்து லேசான காயமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அலிகானை மீட்டு வாரங்கல் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலை மோசமடைந்ததால், ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அலிகான் இறந்தார்.
விசாரணையில் அலிகானுடன் வந்த நண்பர் முகமதுவின் மகள் ஜலந்தரில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால், அவரை பார்க்க ரெயிலில் சென்றதும், அதோடு டெல்லி சென்று ஆக்ரா, செங்கோட்டை ஆகிய இடங்களை சுற்றி பார்க்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வாரங்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெலுங்கானாவில் இருந்து மலப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது. ரெயிலில் நடந்த இந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலி கான் மீது விழுந்த இருக்கையை ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், நடு படுக்கை உடைந்து விழவில்லை. மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் கீழே விழுந்தது. இதனாலேயே, கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார். இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் இறந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்திய ரெயில்வே தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.