பெங்களூருவில் எந்திர கோளாறால் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்
|திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு:-
விமானம் தரையிறக்கம்
பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டது. 8 பேர் அமரும் வசதி கொண்ட அந்த சிறிய ரக விமானத்தில் விமானிகள் 2 பேர் மட்டும் இருந்தனர். அவர்கள் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது விமானம் தரையிறங்குவதற்கு பயன்படும் முன்பக்க சக்கரப்பகுதியில் எந்திர கோளாறு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் விமானத்தை மீண்டும் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக விமான நிலைய ஓடுபாதையில், விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டு இருந்தனர். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் முன்பகுதியில் லேசான சேதம் அடைந்தது.
வீடியோ வைரல்
எனினும் விமானிகள் 2 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதை அடுத்து விமான ஊழியர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர். எனினும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறுகையில், 'எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் நோக்கி புறபட்ட பயிற்சி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது. அப்போது சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, உடனடியாக விமானத்தை எச்.ஏ.எல். விமான நிலையத்தில் தரையிறக்கினார். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. 2 விமானிகள் மட்டும் இருந்தனர்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.