< Back
தேசிய செய்திகள்
ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை; நேபாள நாட்டு பயணி மீது வழக்கு
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை; நேபாள நாட்டு பயணி மீது வழக்கு

தினத்தந்தி
|
12 July 2023 1:43 AM GMT

ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நேபாள நாட்டு பயணி மீது வழக்கு பதிவாகி உள்ளது.

புதுடெல்லி,

கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த நேபாள நாட்டு பயணி ஒருவர் திடீரென ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார்.

இதுபற்றி அந்த விமானத்தின் மேற்பார்வையாளரான ஆதித்ய குமார், டெல்லி போலீசில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்து உள்ளார். அதில், மகேஷ் சிங் பண்டிட் என்ற நேபாள நாட்டை சேர்ந்த பயணி அவரது இருக்கையில் இருந்து வேறு இருக்கைக்கு சென்று உள்ளார்.

அதன்பின், விமான ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி விமானிக்கு ஊழியர்கள் விவரம் தெரிவித்து விட்டு, அந்த பயணிக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

தொடர்ந்து மதிய உணவு முடிந்த பின்னர், அந்த பயணி கழிவறையில் சிகரெட் லைட்டர் ஒன்றுடன் காணப்பட்டு உள்ளார். உள்ளே இருந்து சிகரெட் புகை மணமும் வந்து உள்ளது. இதனை கதவை திறந்த ஊழியர், கவனித்து உள்ளார்.

உடனே, அவர் ஊழியரை தள்ளி விட்டு விட்டு, இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். கழிவறையின் கதவையும் அந்த பயணி உடைத்து உள்ளார்.

இதனை அடுத்து, விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், விமான ஊழியர் புனித் சர்மா மற்றும் பிற 4 பயணிகள் உதவியுடன், விதிகளின்படி அந்த பயணியை கட்டுப்படுத்த முயற்சித்தோம் என ஆதித்யா தெரிவித்து உள்ளார்.

அந்த எப்.ஐ.ஆர். பதிவில், மற்ற 10 பயணிகள் உதவியுடன் நேபாள பயணியை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், அந்த பயணிகளை அவர் அடிக்க முயற்சித்து உள்ளார் என பின்னர் தெரிய வந்தது என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி டெல்லி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்