< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீவிபத்து

தினத்தந்தி
|
20 Aug 2023 12:15 AM IST

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது.

பெங்களூரு:

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது.

உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில்

கர்நாடக தலைநகர் பெங்களூரு நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா பெங்களூரு (கே.எஸ்.ஆர். பெங்களூரு) ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இது பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.45 மணி அளவில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு மராட்டிய தலைநகர் மும்பையில் இருந்து உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயில் 3-வது நடைமேடைக்கு வந்தது.

2 பெட்டிகளில் தீப்பிடித்தது

இதையடுத்து ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். இதனால் ரெயில் காலி பெட்டிகளுடன் 3-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 7.10 மணி அளவில் 'பி1', 'பி2' ஆகிய 2 ஏ.சி. பெட்டிகளில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியானது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது அந்த 2 பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

புகைமண்டலம்

இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 5 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் பெட்டிகளில் பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க, தீப்பிடித்த பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் பிரித்து அகற்றப்பட்டன. பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காலை 7.35 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குள் 2 பெட்டிகளும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தால் ரெயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ேமலும் அந்த புகை சாலை வரை பரவியது. சாலை வரை புைக பரவியதால் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என பயணிகள் மற்றும் மக்கள் பதறி அடித்து ஓடிவந்து பார்த்தனர். இதனால் அந்தப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

ஹரிசேகரன் நேரில் ஆய்வு

இந்த தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி. ஹரிசேகரன், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சுவுமியா லதா ஆகியோர் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும், ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். முக்கிய ரெயில் நிலையமான பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை - கூடுதல் டி.ஜி.பி. ஹரிசேகரன்

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி.ஹரிசேகரன் கூறுகையில், "பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த மும்பை உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரெயில் ஓடும்போதோ அல்லது ரெயில் நிலையத்துக்கு வந்ததும் தீப்பிடித்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக ரெயில் நிலையத்துக்கு வந்து, பயணிகள் இறங்கி சென்ற பிறகு தீப்பிடித்துள்ளது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் யாரேனும் ரெயிலுக்கு தீ வைத்தார்களா? அல்லது புகைப்பிடித்து விட்டு பீடி, சிகரெட்டை போட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு - ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு

ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சவுமியா லதா கூறுகையில், "மும்பையில் இருந்து பெங்களூரு ெரயில் நிலையத்துக்கு வந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 ஏ.சி. பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்படும்போது ரெயிலில் பயணிகள் யாரும் இருக்கவில்லை. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் ரெயில் பெட்டிகளில் தீப்பிடித்தது குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனாலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும். இந்த தீ விபத்தால் மற்ற ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. வழக்கமான நேரத்தில் அவை இயக்கப்படும். இதனால் பயணிகள் அச்சமடைய தேவையில்லை" என்றார்.

மேலும் செய்திகள்