துயர சம்பவம்... தந்தையிடம் இருந்து பறித்த 4 மாத குழந்தையை 3 மாடி வீட்டில் இருந்து வீசிய குரங்குகள்
|உத்தர பிரதேசத்தில் தந்தையிடம் இருந்து 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் பறித்து 3 மாடி வீட்டின் மேல்தளத்தில் இருந்து வீசி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பரேலி,
உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் துங்கா பகுதியில் வசித்து வரும் நபர் தனது 3 மாடி வீட்டின் மேல் தளத்தில் தனது 4 மாத ஆண் குழந்தையை கைகளில் சுமந்தபடி நடந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், சில குரங்குகள் கும்பலாக அந்த பகுதிக்கு வந்துள்ளன. அந்த நபரை பார்த்த குரங்குகள் திடீரென அவரருகே சென்று அவரை தாக்க தொடங்கின. இதனால், அவர் உதவி கேட்டு, அலறி கூச்சல் போட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் வருவதற்குள் அவரிடம் இருந்து குழந்தையை குரங்குகள் பறித்து உள்ளன. இதன்பின்னர் குழந்தையை தூக்கி 3 மாடி கொண்ட வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே வீசியுள்ளன. இதில் குழந்தை உயிரிழந்தது.
வீட்டின் மாடிக்கு வந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் குரங்குகள் தாக்கியுள்ளன. குழந்தையின் தந்தையையும் அவை கடித்து வைத்துள்ளன. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த இருந்த நேரத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.
இதுபற்றி பரேலி வன துறை தலைவர் லலித் வர்மா கூறும்போது, சம்பவம் பற்றி பதிவு செய்து உள்ளோம். விசாரணை நடத்துவதற்கு வன துறை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.