கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோகம்
|பெங்களூரு-மைசூரு அதிவிரைவுச்சாலையில் கன்னட நடிகர் விபத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டியா:-
நடிகர் லோகேஷ் பிணம்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள தொடுப்பூரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கன்னட திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான தொடுப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் அதிகாலை 5.15 மணி அளவில் மண்டியா மாவட்டம் எலியூர் அருகே நடுரோட்டில் கிடந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இரு கைகள், கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டியா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்தவர் நடிகர் லோகேஷ் என்பதும், சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்தது. ஆனால் விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. அத்துடன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த கார் மோதி இருக்கலாம் என்றும், இதில் லோகேஷ் பலியாகி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
ஏனெனில் அப்பகுதியில் காரின் வாகன பதிவெண் பலகை கிடந்துள்ளது. மேலும் விபத்து நடந்ததற்கான அடையாளமும் சாலையில் தென்பட்டன. இதையடுத்து காரின் வாகன பதிவெண் பலகையை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் விபத்தில் பலியான லோகேசின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.