சத்தீஷ்காரில் சோகம்: நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி
|சத்தீஷ்காரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதில் நீரில் மூழ்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
கொரியா,
சத்தீஷ்காரின் கொரியா மாவட்டத்தில் ராம்தாஹா நீர்வீழ்ச்சி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதிக்கு சுற்றுலாவாக வந்த 7 பேர் கொண்ட குழு நீர்வீழ்ச்சியில் குளிக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி, அவர்கள் நீரில் இறங்கி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில், நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் ஆழமும் அதிகளவில் இருந்துள்ளது. இதனை அறியாமல் குளிக்க சென்ற சுற்றுலாவாசிகள் நீரின் வேகத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டு உள்ளனர். காப்பாற்றும்படியும் கூச்சலிட்டு உள்ளனர். எனினும், நீரின் இரைச்சலால் அந்த சப்தம் கேட்கவில்லை.
இதன்பின்பு தகவல் அறிந்து மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில், நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார் என மாவட்ட மாஜிஸ்திரேட் குல்தீப் சர்மா கூறியுள்ளார்.
சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.