விளையாட்டால் விபரீதம்.. 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
|கீழே விழுந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எர்ணாகுளம் ,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்த சக்கீர் - சுமினா தம்பதியின் மகள் நிகிதா (வயது 13). கொச்சி துறைமுகம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் இரவு சிறுமி, தனது உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் சென்றிருந்தாள். அங்கு 3-வது மாடியில் நிகிதாவும் உறவினர் வீட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமியுமான பாத்திமாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று 2 பேரும் நிலை தடுமாறி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் அவர்கள் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நிகிதா பரிதாபமாக இறந்தாள். பாத்திமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு விபரீதமான வகையில் சிறுமி ஒருவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.