< Back
தேசிய செய்திகள்
போக்குவரத்து விதிமுறை மீறிய வழக்குகளில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க முடிவு
தேசிய செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறிய வழக்குகளில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க முடிவு

தினத்தந்தி
|
14 Feb 2023 12:15 AM IST

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்கில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் காலஅவகாசம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

பெங்களூரு:

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்கில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் காலஅவகாசம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

பெங்களூருவில் ரூ.120 கோடி

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கோடிக்கணக்கான வழக்குகள் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது. அந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக லோக் அதாலத் கூறிய ஆலோசனையின்படி 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்தலாம் என்று போக்குவரத்து போலீசார் கூறி இருந்தார்கள்.

அதன்படி, கடந்த 3-ந் தேதியில் இருந்து 11-ந் தேதி வரை, 9 நாட்கள் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 50 சதவீத சலுகையில், பாதியளவு அபராதம் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி, 9 நாட்களில் பெங்களூருவில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் அபராதம் வசூல் ஆகி இருந்தது.

இன்று ஆலோசனை

50 சதவீத சலுகையில் அபராதம் கட்டுவதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், மேலும் சில நாட்கள் இந்த சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில், பெங்களூரு போக்குவரத்து போலீசார் சார்பில், கர்நாடக சட்ட சேவை ஆணையத்திடம் 50 சதவீத சலுகையில் பெங்களூருவில் வசூலான தொகை உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளித்துள்னர்.

அதே நேரத்தில் மாநில சட்ட சேவை ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான வீரப்பா இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்துவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ரூ.1,300 கோடி பாக்கி

மாநில சட்ட சேவை ஆணையம் அனுமதி வழங்கினால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்துவதற்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1,300 கோடி அபராதம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள், அரசு போக்குவரத்து கழகங்கள் பாக்கி வைத்துள்ளனர்.

50 சதவீத தள்ளுபடியில் மாநிலம் முழுவதும் ரூ.120 கோடி அபராதம் வசூலாகி இருப்பதால், இன்னும் சுமார் ரூ.1,000 கோடி அபராதம் பாக்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்துவதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்