< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை
தேசிய செய்திகள்

பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை

தினத்தந்தி
|
7 Dec 2022 10:10 PM GMT

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து போக்குவரத்து சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து போக்குவரத்து சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சரக்கு வாகனங்களுக்கு தடை

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து சிறப்பு கமிஷனராக சலீம் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதல் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி, ஹெப்பால் மேம்பாலத்தில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்துள்ளார். இதனால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபோல், நகரில் உள்ள மற்ற மேம்பாலங்களிலும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வாகனங்கள் நிறுத்த தடை

அதே நேரத்தில் காலை 8.30 மணிக்கு மேல் பெங்களூருவில் பள்ளி வாகனங்கள் ஓடுவதற்கு சிறப்பு கமிஷனர் சலீம் தடை விதித்திருக்கிறார். இதன் காரணமாக பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காலை நேரத்தில் குறைந்திருப்பதால், சமூக வலைதளங்கள் மூலமாக சிறப்பு கமிஷனர் சலீமுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பெங்களூருவில் முக்கிய சாலைகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள் முன்பாக வாகனங்களை நிறுத்துவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது பற்றி சிறப்பு கமிஷனர் சலீம் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவை போக்குவரத்து சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பான பயணம்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணவும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளை அடையாளம் கண்டு, அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது என்பது குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கே...

எல்லாவற்றுக்கும் மேலாக காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரையும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சாலையில் இறங்கி பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாலைக்கு வந்தால், மற்ற போலீஸ்காரர்களும் பணியாற்றுவார்கள்.

இதன்மூலம் எந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ?, அங்கு நிலவும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியும். நான் கூட தினமும் காலை 7 மணிக்கு சாலைக்கு வந்து விடுவேன். வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்