< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?
தேசிய செய்திகள்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா?

தினத்தந்தி
|
29 Dec 2022 10:15 PM GMT

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியுள்ளனர்.

1 கோடியை தாண்டிவிட்டது

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு பல பெருமைகளை கொண்ட நகரம் ஆகும். பூங்கா நகரம், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, குளு குளு நகரம் என்ற அடைமொழிகளை கொண்டுள்ளது. அதே போல் பல பிரச்சினைகளையும் பெங்களூரு கொண்டுள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல், குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பது, சாலைகளில் குழிகள் இருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றில் முக்கியமாக வாகன போக்குவரத்து நெரிசல் என்பது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.

பெங்களூருவின் மக்கள்தொகை 1.30 கோடி ஆகும். அதே நேரத்தில் இங்குள்ள வாகனங்களின் எண்ணிக்கையும் 1 கோடியை தாண்டிவிட்டது. நகரில் தினமும் புதிதாக 2,500 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு சாலைக்கு வருகின்றன. அதனால் வருகிற ஆண்டு இறுதிக்குள் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள்தொகையை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கிறது.

போக்குவரத்து நெரிசல்

வாகனங்களின் பெருக்கத்தால் பெரும்பாலான வாகனங்கள் நகரில் சாலைகளின் ஓரத்தில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால் 50 சதவீத சாலைகளை வாகனங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் வாகன நெரிசல் அதிகரிக்கின்றன. பெங்களூருவில் முக்கியமான நேரத்தில் அதாவது காலை மற்றும் மாலை நேரத்தில் மணிக்கு 8 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

மழை, அமைப்புகளின் போராட்டங்களின் போது, முக்கியமான சாலைகளில் வாகன நெரிசல் ஸ்தம்பித்துவிடும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். இந்த போக்குவரத்து நெரிசல் பெங்களூருவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய சவாலாக உள்ளது. இந்த நெரிசலை குறைக்க கர்நாடக அரசு பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவை

நகரில் தற்போது 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திராவில் இருந்து பட்டு நிறுவனம் (அஞ்சனாப்புரா) வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதாவது நாகவரா முதல் கொட்டிகெரே வரையிலும், ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலும் பணிகள் நடக்கின்றன. இதில் ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையே 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு வருகிற ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அடுத்தடுத்து மெட்ரோ சேவை வழங்கப்படும் பகுதி அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் வாகன நெரிசல் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் பாதிக்கிறது

வாகன போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

சுதந்திர பூங்கா பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்த ஆட்டோ டிரைவர் ராகவேந்திரா கூறுகையில், "பெங்களூருவில் நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. தொடக்கத்தில் வாகன நெரிசல் குறைவாக தான் இருந்தது. கொரோனா காலத்தில் நெரிசல் மிக குறைவாக இருந்தது. கொரோனாவுக்கு பிறகு பழைய நிலைமை திரும்பிவிட்டதால், வாகன நெரிசல் முன்பைவிட அதிகரித்துவிட்டது. இந்த வாகன நெரிசலால் எங்களால் ஒரு இடத்திற்கு விரைந்து செல்ல முடிவதில்லை. இதனால் எங்களது வருவாய் பாதிக்கிறது. பொருளாதார ரீதியாக நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால் இந்த வாகன நெரிசல் பிரச்சினைக்கு அரசு விரைவாக தீர்வு காண வேண்டும்" என்றார்.

விவேக்நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக் கூறும்போது, "நான் கோரமங்களாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறேன். எனது வீட்டில் இருந்து அந்த கல்லூரிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. நான் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறேன். வாகன நெரிசலால் கல்லூரிக்கு செல்ல கடும் சிரமமாக உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. சில நேரங்களில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. அதுபோன்ற நேரத்தில் கல்லூரிக்கு செல்ல அதிக நேரம் ஆகிவிடுகிறது. அதனால் வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை வழங்க வேண்டும்" என்றார்.

போக்குவரத்து ஆணையம்

சமூக ஆர்வலரும், போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி குரல் கொடுத்து வருகிறவரும், பெங்களூரு சிட்டிசன்ஸ் அஜன்டா என்ற அமைப்பின் அமைப்பாளருமான சந்தீப் அனிருத்தன் கூறுகையில், "பெங்களூருவில் மக்கள்தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகாில் தற்போது 1.10 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. அதனால் டெல்லி, மும்பையை விட பெங்களூருவில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. மும்பையில் மக்கள்தொகை 2 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனால் அங்கு 40 லட்சம் வாகனங்கள் தான் ஓடுகின்றன.

அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் இருப்பது இல்லை. சென்னையிலும் புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற போக்குவரத்து சேவைகள் இருப்பதால், அங்கும் வாகன நெரிசல் குறைவாக தான் உள்ளது. பெங்களூருவில் தான் தாங்க முடியாத அளவுக்கு வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் கர்நாடக அரசு பெங்களூரு நகர போக்குவரத்து ஆணைய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த ஆணையம் அமலுக்கு வந்தாலும், போக்குவரத்து நெரிசலை குறைப்பது கடினம். சம்பந்தப்பட்ட துறைகள் இடையே எளிதாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும். ஆனால் வாகன நெரிசல் பிரச்சினை தீராது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க வேண்டும். அப்போது தான் பிரச்சினை தீரும்" என்றார்.

பொது போக்குவரத்து வசதி குறைவு

பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம் கூறியதாவது:-

பெரிய நகரங்களின் பட்டியலில் டெல்லியும், பெங்களூருவும் ஒன்றே. மும்பை மாநகரம் வேறு. மும்பையில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிப்பது எளிது. அங்கு 82 சதவீத பொது போக்குவரத்து வசதி உள்ளது. பெங்களூருவில் இது 45 சதவீதமாக உள்ளது. 43 சதவீதம் பேர் சொந்த வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆட்டோ-வாடகை கார்களை 12 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் மெட்ரோ, புறநகர் ரெயில் வசதி அதிகமாக கிடைக்கும் என்பதால், சொந்த வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறையும். அந்த நிலை வந்தால், வாகன நெரிசல் குறைந்துவிடும்.

அலுவலகங்களுக்கு செல்வோர் 10 நிமிடங்கள் முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்டால் எந்த பதற்றமும் ஏற்படாது. அமைதியாக வாகனத்தை ஓட்டி சென்று அலுவலகத்தை சென்றடையலாம். பெங்களூருவில் போதுமான பொது போக்குவரத்து வசதிகள் இல்லை. மெட்ரோ, புறநகர் ரெயில் திட்ட கட்டமைப்பு பணிகளை முடிக்க அதிக காலம் ஆகிறது.

நகரில் தற்போது 1.07 கோடி வாகனங்கள் ஓடுகின்றன. தினமும் 2,500 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு சாலைக்கு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் எளிமையான போக்குவரத்தை உறுதி செய்வது தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எங்களின் மொத்த மனித வளத்தை காலை மற்றும் மாலை நேரத்தில் முழுமையாக பயன்படுத்துகிறோம். இதனால் வாகன நெரிசல் ஏற்படுவது குறைகிறது.

காலை மற்றும் மாலை நேரத்தில் கனரக மற்றும் நடுத்தர ரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளோம். ஒரு வழிப்பாதை முறையை பின்பற்றுவதால் நகரின் மையப்பகுதியில் வாகன நெரிசல் குறைந்துள்ளது. ஆனால் ஹெப்பால் மேம்பாலம், குரகுன்டேபாளையா சந்திப்பு, மைசூரு ரோடு, சில்க் போர்டு, டின் பேக்ட்ரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் தான் வாகன நெரிசல் பிரச்சினை அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் வாகன நெரிசலை குறைக்க நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த பகுதிகளில் ஒரு சந்திப்பை கடந்து செல்லவே 20 முதல் 25 நிமிடங்களை வாகன ஓட்டிகள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஹெப்பால் மேம்பாலத்தில் அனைத்து வகையான சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கும் அலுவலக நேரத்தில் தடை விதித்துள்ளோம். அவர்களுக்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.

மாலை நேரத்திலும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்க இருக்கிறோம். தொழில்நுட்பத்தால் எங்கெங்கு வாகன நெரிசல் இருக்கிறது என்பதை சாமானிய மக்களும் தெரிந்து கொள்ள முடியும். இருசக்கர வாகன ஓட்டிகள் சில நேரங்களில் நடைபாதையில் செல்கிறார்கள். அத்தகையவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறோம். கடந்த 45 நாட்களில் 2,900 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். வாகனங்களை பறிமுதல் செய்து, கோர்ட்டு மூலம் மட்டுமே வழங்குகிறோம். போக்குவரத்து போலீசார் நியமனத்தில் அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. தனியார் நிறுவனங்களும் உதவி செய்கின்றன. எங்கள் துறையில் போலீசாருக்கு 7 மணி நேர 'ஷிப்டு' முறையை பின்பற்றுகிறோம். வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கிறோம்.

இவ்வாறு எம்.ஏ.சலீம் கூறினார்.

மேலும் செய்திகள்