< Back
தேசிய செய்திகள்
சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்
தேசிய செய்திகள்

சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்

தினத்தந்தி
|
29 Dec 2022 3:22 AM IST

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து கெடுபிடி அபராதம் வசூலிக்கப்படுவது குறித்து மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடக தலைநகர் பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

லட்சக்கணக்கான வாகனங்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடுகளை சேர்ந்த பெரிய நிறுவனங்கள் பெங்களூருவில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய அண்டை மாநிலத்தினரும், வெளிநாட்டினரும் வேலை செய்து வருகின்றனர்.

இதனால் பெங்களூரு நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்து உள்ளது. பெங்களூரு நகரில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஓடுகின்றன. இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகள், முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 2 முதல் 3 மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் காத்து இருக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

கடுமையாக நடந்து கொள்ளும் போலீசார்

இந்த நிலையில் பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் மத்தியில் ஹீரோக்களாக தெரியும் போக்குவரத்து போலீசார், பல நேரங்களில் பொதுமக்கள் மத்தியில் வில்லன்களாக மாறி விடுகின்றனர்.

அதாவது போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து போலீசார் கடுமையாக நடந்து கொள்வதுடன், அவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் பெரிய தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

பெங்களூருவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, ஒரு வழி பாதையில் பயணம் செய்வது உள்பட பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிக்னலில் நிற்காமல் சென்றாலும் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

அபராத தொகை உயர்வு

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹெல்மெட் அணியாமல், சிக்னலில் நிற்காமல் சென்றால் ரூ.100 தான் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதுபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

அந்தப் புதிய வாகனச் சட்டத்தின்படி இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டது.

கர்நாடகத்திலும் தற்போது அந்த அபராத தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அபராதம் என்ற பெயரில் போக்குவரத்து போலீசார் கொள்ளையடித்து வருவதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மேலும் இந்த ஆண்டு முடிய உள்ளதால் போலீஸ் துறைக்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போக்குவரத்து போலீசார் செயல்படுவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் பின்வருமாறு:-

புரிந்துகொள்ள வேண்டும்

பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பூங்கொடி, "வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறு தான். ஒரு சிலர் அவசரமாக செல்லும் போது சிக்னலில் நிற்காமல் சென்று விடுகிறார்கள். இதற்காக ரூ.500 அபராதம் வசூலிப்பது தவறு. முன்பு இருந்தது போல ரூ.100 அபராதம் வசூலிக்கலாம். வாகன சோதனையில் ஈடுபடும் சில போக்குவரத்து போலீசார் அபராதம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணத்தை பறித்து வருகின்றனர். பணக்காரர்களுக்கு அபராதம் கட்டுவது பெரிய விஷயமாக இருக்காது.

ஆனால் ஏழை, எளிய மக்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். தினக்கூலியாக ரூ.500-க்கு வேலை செய்பவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் ரூ.500 வசூலித்தால் அவர்கள் நிலை என்ன என்பதை போக்குவரத்து போலீசார் புரிந்து கொள்ள வேண்டும்''.

அபராதத்தை குறைக்க நடவடிக்கை

மைசூரு ரோட்டில் வசித்து வரும் ஏஞ்சல், ''போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் பல மடங்கு கட்டணத்தை போக்குவரத்து போலீசார் வசூலித்து வருகின்றனர். முன்பு இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் அபராதம் கிடையாது. தற்போது இணைப்பு சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அபராதம் வசூலிக்கின்றனர்.

சில சமயங்களில் குறுகிய தெருக்களில் நின்று கொண்டும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால் போக்குவரத்து போலீசாரின் கண்களில் இருந்து தப்பவே முடியாது. அபராத தொகை தற்போது 5 முதல் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

2 நாட்கள் குடும்பத்தை...

சமூக ஆர்வலரான அல்லா மூர்த்தி, "பெங்களூரு பெரிய நகரமாக உருவெடுத்துவிட்டது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது கஷ்டம் தான். போக்குவரத்து போலீசாரும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில போக்குவரத்து போலீசார் அபராதம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகின்றனர். பெரிய பணக்காரர்களுக்கு அபராத தொகை கட்டுவது எல்லாம் பெரிய விஷயம் இல்லை.

ஆனால் ஏழை, எளிய மக்களின் நிலை கஷ்டம் தான். அபராத தொகையை குறைக்க அரசு முன்வர வேண்டும். முன்பு இருந்தது போல ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100, சிக்னலில் நிற்காமல் சென்றால் ரூ.100-ஐ அபராதமாக வசூலிக்கலாம். ரூ.500 என்பது பெரிய தொகை. ரூ.500 இருந்தால் ஏழை, எளிய மக்கள் 2 நாட்கள் குடும்பத்தை நடத்தி விடுவார்கள்''.

போலீஸ்காரர்கள் செய்யும் தவறு

எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பிரவீன், "பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கவனமாக தான் ஓட்டி செல்ல வேண்டி உள்ளது. சில சிக்னல்களில் நேரம் ஓடுவது இல்லை. விளக்குகள் மட்டும் தான் எரிகிறது. நாம் சிக்னலுக்கு அருகில் செல்லும் போது பச்சை விளக்கு திடீரென சிவப்பு விளக்காக மாறிவிடுகிறது. இதனால் சிக்னலில் நிற்காமல் சென்றதாக கூறி வாகனம் மீது வழக்குப்பதிவு ஆகிறது.

இது வாகன ஓட்டிகளின் தவறு இல்லை. சிக்னல்களில் நேரம் ஓடுவதை போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் தவறுக்காக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அபராத தொகையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி உள்ளனர். போக்குவரத்து விதிகளை தெரியாமல் மீறினாலும் கூட அபராதம் செலுத்த வேண்டி உள்ளது. அபராத தொகைக்காக மாதம் ரூ.1,000 செலவழிக்க வேண்டி உள்ளது''.

போலீசார் கூறுவது என்ன?

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

அபராத தொகை என்ற பெயரில் பணத்தை பறிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டியது தான் எங்களது வேலை. எங்கள் வேலையை நாங்கள் சரியாக செய்து வருகிறோம். போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டுபவர்களிடமா நாங்கள் அபராதம் விதிக்கிறோம். விதிமீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கிறோம். உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அரை ஹெல்மெட் அணிய கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஆனாலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அரை ஹெல்மெட் தான் அணிந்து செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் உயிர் மீது கவலை இல்லை. அதற்காக நாங்கள் அப்படியே விட முடியாது. அபராத தொகையை பல மடங்கு அதிகரித்தால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறோம். போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் எங்கள் மீது குறை கூறுவது நியாயமா? எங்களை மட்டும் திட்டாமல் எங்களது குடும்பத்தினரையும் சேர்ந்து திட்டுகின்றனர். எங்கள் வேதனையை யாரிடம் சொல்வது? என்று ஆதங்கப்பட கூறினர்.

மேலும் செய்திகள்