கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வியாபாரி கொலை; காதலனுடன் மனைவி கைது
|கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வியாபாரியை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வியாபாரியை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.
ஆண் உடல் மீட்பு
உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட தேவரமனே பகுதியில் உள்ள ஒரு கோவில் பின்புறம் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் குமட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் உடலில் காயங்கள் இருந்ததால், அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரியவந்தது. அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. மேலும் அந்த நபரின் பையில் இருந்த அரசு பஸ் டிக்கெட் மூலம் போலீசாருக்கு துப்பு கிடைத்தது.
மனைவியிடம் விசாரணை
விசாரணையில், அவர் கதக் மாவட்டம் கஜேந்திரகட் தாலுகா முச்சேரியை சேர்ந்த பஷீர் என்பதும், அவர் ஆட்டு வியாபாரி என்பதும் தெரியவந்தது. மேலும் பஷீரின் மனைவி ரெஜிமாவின் நடவடிக்கையிலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் ரெஜிமாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் பஷீரை கொலை செய்ததை ரெஜிமா ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது.
கள்ளத்தொடர்பு
அதாவது, ஆட்டு வியாபாரம் தொடர்பாக பஷீரின் தம்பி காசிம் மூலம் பாதாமியை சேர்ந்த பரசுராம் என்பவரின் அறிமுகம் பஷீருக்கு கிடைத்துள்ளது. இதனால் பரசுராம் அடிக்கடி பஷீரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், பஷீரின் மனைவி ரெஜிமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பஷீர், தனது மனைவி ரெஜிமாவையும், பரசுராமையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள பஷீரை தீர்த்துக்கட்ட ரெஜிமா முடிவு செய்தார். இதுகுறித்து தனது கள்ளக்காதலன் பரசுராமிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
2 பேர் கைது
இதையடுத்து கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி ஆட்டு வியாபாரம் தொடர்பாக மங்களூருவுக்கு பஷீரை பரசுராம் அழைத்து வந்துள்ளார். அவர்களுடன் பரசுராமின் நண்பர்களும் சென்றுள்ளனர். பின்னர் மங்களூருவில் இருந்து கதக் செல்லும் வழியில் குமட்டாவில் அவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி உள்ளனர். இதையடுத்து தேவரமனே பகுதியில் உள்ள கோவில் பின்புறம் பஷீரை பரசுராம் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் மது குடித்து உள்ளனர். அப்போது, திடீரென பரசுராமும் அவரது நண்பர்களும் சேர்ந்து பஷீரை அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஷீரின் மனைவி ரெஜிமா மற்றும் பரசுராமை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.