தென்காசி
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
|விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
'தென்னகத்தின் ஸ்பா' என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டுவிட்டு பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். நண்பர்களாகவும், குடும்பமாகவும் ஏராளமானவர்கள் குற்றாலத்துக்கு வந்தனர். இதனால் இங்குள்ள பெரும்பாலான விடுதிகள் நிரம்பி உள்ளன. மேலும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்ததால் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.