ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை கடக்கும் சுற்றுலா பயணிகள்
|துபாரேயில் யானைகள் முகாமுக்கு செல்ல ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை சுற்றுலா பயணிகள் கடந்து செல்கிறார்கள். இதனால் அங்கு தொங்குப்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடகு;
குடகு
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதனால் கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடகிற்கு வந்து செல்கிறார்கள். குடகில் துபாரே, ராஜாசீட் பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிவார்கள். துபாரேயில் யானை சவாரி, படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.
படகு சவாரி ரத்து
இந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் துபாரேயில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் துபாரேயில் யானை சவாரி செல்ல காவிரி ஆற்றை கடந்து தான் யானை முகாமிற்கு செல்ல வேண்டும். படகுகள் மூலமாக சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு சென்று வந்தனர்.
ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், யானைகள் முகாமிற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள்.
ஆபத்தான பயணம்
மேலும் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு செல்ல காவிரி ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள். அதாவது, குறைவான தண்ணீர் ஓடுவதால், கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் இறங்கி இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்கிறார்கள். இதனால் பலர் வழுக்கி விழுந்தும், தவறி விழுந்தும் காயம் அடைந்து வருகிறார்கள்.
இதனால் வனத்துறையினரும், போலீசாரும் யாரும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், துபாரே பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.