< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது; 8 பேர் உடல் கருகி சாவு

தினத்தந்தி
|
4 Jun 2022 3:19 AM IST

கலபுரகி அருகே சரக்கு வேன் மீது சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் தம்பதிகள் உள்பட 8 பேர் உடல் கருகி பலியானார்கள். பிறந்தநாளை கோவாவுக்கு சென்று கொண்டாடி திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:

சுற்றுலா பஸ் தீப்பிடித்தது

கலபுரகி மாவட்டம் கமலாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உம்னாபாத் நோக்கி நேற்று காலை 6.30 மணிக்கு தனியார் சுற்றுலா பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் கமலாபுராவை நோக்கி ஒரு சரக்கு வேன் வந்தது. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக சுற்றுலா பஸ்சும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

மினிலாரி மீது மோதிய சுற்றுலா பஸ் சில அடி தூரம் சென்று, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்த பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இதையடுத்து அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதன் காரணமாக பஸ்சுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் மரண ஓலமிட்டனர்.

8 பேர் உடல் கருகி சாவு

அதேநேரத்தில் பஸ்சில் இருந்த அவசர வழி மூலமாக உள்ளே இருந்தவர்கள் வெளியே குதித்தார்கள். மேலும் சிலர் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனர். பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், பலர் வெளியே வர முடியாமல் கருகினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படைவீரர்களுக்கும் தகவல் தெரிவித்தார்கள். மேலும் தீப்பிடித்து எரிந்த பஸ் மீது தண்ணீரை ஊற்றி, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பிடித்து எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. அந்த பஸ்சுக்குள் 8 பேர் உடல் கருகியபடி பிணமாக கிடந்தனர். அவா்கள் 8 பேரின் உடல்களும் அடையாளம் காணாதபடி எரிந்திருந்தது. இதையடுத்து, போலீசார் 8 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஐதராபாத்தை சேர்ந்த குடும்பத்தினர்

மேலும் பலத்த தீக்காயம் அடைந்த 12 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பற்றி அறிந்ததும் கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இஷாபண்ட், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், பலியானவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 30 பேர் தனியார் சுற்றுலா பஸ்சில் கோவாவுக்கு சென்றுவிட்டு, கர்நாடக மாநிலம் கலபுரகி வழியாக ஐதராபாத்திற்கு சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. சரக்கு வேன் மீது பஸ் மோதிவிட்டு கவிழ்ந்த போது டீசல் டேங்கர் உடைந்ததால் பஸ்சில் தீப்பிடித்திருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் விவரம்

இந்த விபத்தில் பலியானவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரான அர்ஜூன்குமார் (வயது 37), அவரது மனைவி சரளா தேவி (32), இவா்களது மகன் பீவான் (4), சிவக்குமாா் (35), இவருடைய மனைவி ரவாலி (31), அனிதா ராஜு (40), தீக்சித் (9) ஆகிய 7 பேர் உள்பட 8 பேர் என்பது தெரியவந்தது. விபத்தில் பலியான மற்றொரு நபரின் பெயர், விவரம் தெரியவரவில்லை.

இவர்களில் அர்ஜூன் குமார் தனது மகன் பீவானின் பிறந்தநாளை கொண்டாட கடந்த மாதம் (மே) 29-ந்தேதி தனது குடும்பத்தினர் 30 பேரை கோவாவுக்கு அழைத்து சென்றிருந்தார். கோவாவில் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, அங்கு 2 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு சுற்றுலா பஸ்சில் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றபோது கலபுரகி அருகே விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

அதிவேகம் காரணம்

சுற்றுலா பஸ்சை டிரைவர் அதிவேகமாக ஓட்டியே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவரும் படுகாயம் அடைந்திருந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கமலாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியான சம்பவம் கர்நாடகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஸ் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவு- மந்திரி ஸ்ரீராமுலு

கலபுரகியில் நடந்த பஸ் விபத்து பற்றி மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களிடம் கூறுகையில், "கலபுரகியில் தனியார் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி இருப்பது வேதனையாக உள்ளது. விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வந்த பிறகு தான், விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும். கோவாவுக்கு சென்றுவிட்டு ஐதராபாத் சென்ற குடும்பத்தினர் விபத்தில் பலியாகி இருக்கிறாா்கள். பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

கண்ணாடியை உடைத்து தப்பிய 12 பேர்

கலபுரகியில் தீப்பிடித்த தனியார் சுற்றுலா பஸ்சில் 32 பேர் இருந்தனர். காலை நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். பஸ் பல்டி அடித்த போது சில பயணிகள் கீழே விழுந்திருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தனர். அதே நேரத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிய 8 பேர் தான், வெளியே தப்பித்து வர முடியாமல் கருகி செத்தது தெரியவந்தது. பஸ்சில் தீப்பிடித்ததும் உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களை காப்பாற்ற கிராம மக்கள் முயன்றனர். பஸ்சுக்குள் இருந்தவர்களும் உயிரை காப்பாற்ற கண்ணாடி உடைத்தாா்கள். அவ்வாறு 12 பேர் பஸ் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்