< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு

தினத்தந்தி
|
26 Sept 2023 4:40 AM IST

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை நிறுத்தக் கோரி கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடைபெறுகிறது. இதையொட்டி பஸ், ஆட்டோக்கள் இயங்காது. முழுஅடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.

தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளன. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் 26-ந் தேதி (அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன. ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறியுள்ளன. இது தவிர உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்பட சில சங்கங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.

முழு அடைப்பையொட்டி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடக்கிறது. டவுன்ஹாலில் ஊர்வலம் தொடங்கி சுதந்திர பூங்கா வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரும், கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்க தலைவருமான குருபூர் சாந்தக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திட்டமிட்டப்படி பெங்களூருவில் நாளை (இன்று) முழு அடைப்பு நடைபெறும். இதற்கு 150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சில கன்னட சங்கங்கள் முழு அடைப்பை ஒத்திவைக்குமாறு கேட்டனர். அதை ஏற்க நாங்கள் மறுத்துவிட்டோம். நாங்கள் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஊர்வலத்தின் முடிவில் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து மனு கொடுப்போம்.

அதன் பிறகும் தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரை நிறுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நாங்கள் கூடி ஆலோசித்து முடிவு எடுப்போம். தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு பெங்களுரு நகர மக்கள் ஆதரவு வழங்குமாறு கேட்கிறோம். நாம் நமது உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தமுழு அடைப்பு நடத்துகிறோம். அதனால் கர்நாடகத்தின் கவலைகளை மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

இவ்வாறு குருபூர் சாந்தக்குமார் கூறினார்.

முழு அடைப்பையொட்டி பஸ், ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுகிறது. அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் மூடப்படுகிறது.

இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்து காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அமைப்பினர், மெஜஸ்டிக் பகுதியில் பஸ்களில் பொதுமக்களுக்கு முழு அடைப்புக்கு ஆதரவு வழங்க கோரி நேற்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவையும் மூடப்படுகிறது. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் போக்குவரத்தும் மிக குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடும் நிலை காணப்படும்.

முழுஅடைப்பு பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று மாலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காவிரி நதிநீர் விவகாரத்தில் பெங்களூருவில் நாளை (அதாவது இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் முழு அடைப்புக்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை. முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 60 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை, 40 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர வெளி மாாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்கு பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டும் சுதந்திர பூங்கா தவிர வேறு எங்கும் போராட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கிடையாது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், சம்பந்தப்பட்டவர்களிடமே வசூல் செய்யப்படும். பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு இன்று (அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (அதாவது இன்று) நள்ளிரவு முதல் அமலில் இருக்கும். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயங்கும்

பெங்களூருவில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திரா முதல் பட்டு நிறுவனம் வரையிலும், கே.ஆர்.புரம் பாதையிலும் சுமார் 69 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று முழுஅடைப்பு நடைபெற்றாலும் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் அறிவித்துள்ளது. மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப மெட்ரோ ரெயில்களின் சேவை வழங்கப்படும் என்றும், மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு

பெங்களூருவில் இன்று முழு அடைப்பையொட்டி நகரம் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் ரவிக்குமார் கஞ்சனஹள்ளி என்பவர் முழுஅடைப்பையொட்டி அரசு மேற்கொண்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை பற்றி பதில் அளிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், முழு அடைப்பையொட்டி அரசு மேற்கொண்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி, முழு அடைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. சுதந்திர பூங்காவில் அமைதியாக போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பெங்களூருவில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு இன்று(செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பஸ்களின் சேவை நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதர தனியார் போக்குவரத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பெங்களூருவில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்