< Back
தேசிய செய்திகள்
முழு அடைப்பு எதிரொலி 44 விமானங்களின் சேவை ரத்து
தேசிய செய்திகள்

முழு அடைப்பு எதிரொலி 44 விமானங்களின் சேவை ரத்து

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

பெங்களூரு

முழு அடைப்பு

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர், திரையுலகினர் உள்பட 1,900-க்கும் மேற்பட்ட அமைப்பினர் பங்கேற்ற முழுஅடைப்பு நேற்று நடந்தது.

இதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கவில்லை. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக விமான பயணிகள் அனைவரும் பயண நேரத்திற்கு 3 மணி நேரம் முன், விமான நிலையத்தை வந்தடையுமாறு கூறப்பட்டு இருந்தது.

விமான சேவை பாதிப்பு

இந்த நிலையில் முழுஅடைப்பு காரணமாக பலரும் விமான பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்தனர். இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் சார்பில் கூறுகையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பலரும் தங்களின் விமான பயணங்களை ரத்து செய்தனர்.

மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பெங்களூரு மற்றும் பிற நகரங்கள் இடையேயான விமான சேவையை பல விமான நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.

44 விமானங்கள் ரத்து

அதன்படி பெங்களூருவில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, மங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட இருந்த 22 விமானங்களும், பிற பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு வர இருந்த 22 விமானங்களும் என மொத்தம் 44 விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நகருக்கு செல்வதற்கு இயக்கப்படும் வாடகை கார்கள், ஆட்டோக்கள் முறையாக செயல்படாததால் பலரும் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 26-ந்தேதி நடந்த பெங்களூரு முழுஅடைப்பின் போது 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்