பள்ளி கட்டணம் கட்டவில்லை என கூறி மாணவர்களை அறையில் அடைத்து சித்ரவதை
|ஒடிசாவில் பள்ளி கட்டணம் கட்டவில்லை என கூறி மாணவர்களை அறையில் அடைத்து சித்ரவதை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கதிகியா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவர்கள் சிலர் சரியான நேரத்தில் படிப்பு கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதற்காக 34 மாணவர்களை பிடித்து, அறை ஒன்றில் வைத்து அடைத்துள்ளனர்.
அவர்களுக்கு சாப்பிட உணவோ, குடிநீரோ கொடுக்கவில்லை. கழிவறைக்கு செல்லவும் அவர்களை அனுமதிக்கவில்லை. ஒரு சில மாணவர்கள் தங்களை பெற்றோருடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆனால், சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக உங்களை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம் என கூறி அதற்கு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
இதன்பின்னர் பள்ளி அதிகாரிகள், மாணவர்களிடம் ஒரு நோட்டீசை கொடுத்து அதனை அவர்களது பெற்றோரிடம் அளிக்கும்படி கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த பெற்றோரில் சிலர், ஆத்திரம் அடைந்து பள்ளியின் வாசல் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒருவர், ஆன்லைன் வழியே முன்பே நாங்கள் படிப்பு கட்டணம் செலுத்தி விட்டோம். ஆனால், தொழில் நுட்ப கோளாறால் அந்த விவரங்கள் காட்டப்படவில்லை என கூறியுள்ளார்.