< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை

தினத்தந்தி
|
3 Dec 2022 6:21 AM IST

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியின் வீட்டில் இன்று கூடுகிறார்கள். அவர்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்கிறார்கள்.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், 7-ந் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற பின்னர் நடைபெறுகிற முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான்.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.மேலும் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரமும், மணிஷ் திவாரியும் கலந்து கொள்ளக்கூடும்.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்