< Back
தேசிய செய்திகள்
அதிக வெப்பம்... டி.வி. நேரலையில் செய்தி வாசிப்பாளர் மயக்கம்; வைரலான வீடியோ
தேசிய செய்திகள்

அதிக வெப்பம்... டி.வி. நேரலையில் செய்தி வாசிப்பாளர் மயக்கம்; வைரலான வீடியோ

தினத்தந்தி
|
21 April 2024 8:33 PM IST

வெப்ப பாதிப்புகளை தடுக்கும் வகையில், போதிய அளவு திரவங்களை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பெண் செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகலில் வெளியே செல்வது என்பது சவாலாக உள்ளது. பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.

இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. விலங்குகளும், பறவைகளும் அதிக வெப்பத்திற்கு பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தூர்தர்சனின் கொல்கத்தா பிரிவில் பெண் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் லோபமுத்ரா சின்ஹா வழக்கம்போல் செய்தி வாசித்து வந்திருக்கிறார்.

அப்போது, அதிக வெப்ப தாக்கத்தினால் ஸ்டுடியோவிலேயே மயங்கி சரிந்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, அறையில் குளிர்ச்சி ஏற்படுத்தும் சாதனம் சரியாக வேலை செய்யவில்லை.

இதனால், ஸ்டுடியோவில் அதிக வெப்பம் காணப்பட்டது. நான் தண்ணீர் பாட்டிலும் என்னுடன் எடுத்து வரவில்லை. என்னுடைய 21 வருட பணி அனுபவத்தில், 15 நிமிடங்களோ அல்லது அரை மணிநேர ஒளிபரப்போ, எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

ஆனால், இந்த முறை செய்தி வாசித்து முடிக்க 15 நிமிடங்கள் மீதமிருக்கும்போதே, வறட்சியாக உணர்ந்தேன். தொலைக்காட்சியில் (டி.வி.) வேறு செய்தி ஓடியபோது, மேலாளரிடம் தண்ணீர் பாட்டில் தரும்படி கேட்டேன். ஆனால், நேரலையில் எனக்கு தண்ணீர் குடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தண்ணீர் குடித்து முடித்ததும் மீதமுள்ள செய்தியை வாசிக்க வேண்டி இருந்தது.

வெப்ப அலை செய்தியை வாசித்து கொண்டிருந்தபோது, பேச முடியாமல் திணறினேன். பேசி முடித்து விடலாம் என முயன்றேன். டெலிபிராம்ப்டரும் மங்கிப்போனது. எனக்கும் இருண்டதுபோல் தோன்றியது. ஆனால், அதிர்ஷ்டவசத்தில் 30 முதல் 40 வினாடிகள் வரை அனிமேசன் வீடியோ ஒன்று ஓடியது. அப்போது, அப்படியே மயங்கி நாற்காலியில் சரிந்து விட்டேன் என கூறுகிறார்.

வீட்டுக்கு வெளியேயோ அல்லது உள்ளேயே இருக்கும்போதும் கூட, போதிய அளவு திரவங்களை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். இதனால், வெப்ப பாதிப்புகளை தடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். எனினும், சிலர் ஓடி வந்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் நினைவு திரும்ப உதவினர். இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்